இந்த நாளும் இந்த புதிய புத்தாண்டும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் மனநலமும் பொங்க இனிமையாகவே அமையட்டும்.எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் தான் என்பது உண்மை . மகப்பேறு காலமும் குழந்தை பிறந்த முதல் வருடமும் பல பெண்களுக்கு உணர்ச்சிகளின் கலவைகளே மேலோங்கும் . எவ்வளவு தான் குழந்தை பிறப்பும் தாய்மையும் மகிழ்ச்சி கொடுத்தாலும் அதனுடன் கூட சேர்ந்து வரும் சில மனஉளைச்சல்களும் தவிர்க்க முடியாத ஒன்று தான் .மகிழ்ச்சி கொடுக்கும் இந்த தருணத்தில் வேண்டா விருந்தாளியாக சில மனப்பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருமதி T அப்பொழுது தான் மருத்துவமனையிலிருந்து குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார் . மிகவும் கடினமாக சூழ்நிலையில் தான் அவர் கருவுற்று குழந்தை பெற்றார் . முதல் பிரசவம் தான் . எல்லாம் புதிதாய் இருப்பது போல அந்த உளைச்சல் தன்னை திணற செய்ததை உணர்ந்தார் . எல்லாம் சரியாக செய்ய வேண்டும் என்ற விருப்பம் அதே நேரம் ஒரு படபடப்பும் இருந்தது . தாய்ப்பால் கொடுத்து குழந்தையை ஓய்வு இல்லாமல் அவரே பார்த்துக்கொண்டார் . 3 மாதங்களும் பறந்தோடின . நாட்கள் ஒரே போல ஓடிக்கொண்டே தான் இருந்தது . போக போக தான் மிகவும் சோர்ந்து போவதையும் தூங்கி எழுந்த பிறகும் ஒரு சுறுசுறுப்பு இல்லாத தன்மையையும் உணர்ந்தார் . இரவில் 3 மாத குழந்தையை வைத்து உறக்கம் என்பது அரிதான விஷயமாகவே இருந்தது . அது போக மதியம் ஒரு மணி நேரம் படுத்தாலும் ஒரு வகை விரக்தியாகவும் , மனம் மிக கவலை கொண்டு ஒரு காரணம் இல்லாமல் அழுது கொண்டே நாட்களை ஓட்டினார் . வீட்டுக்காரருக்கு IT யில் வேலை . அவரை பிடிப்பதே கடினம் . இப்படி இருக்க செலவுகளை ஈடுகட்டவே overtime வேலையும் செய்து கொண்டிருந்தார் . இது போதாதென்று அவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது சண்டை வந்து கொண்டு தான் இருக்கும் .தன் நெருங்கிய தோழிகளை பார்த்து மனம் விட்டு பேச கூட பிடிக்காமல் தொலைபேசியை கூட தவிர்த்து தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தார் .”இப்படி எல்லாம் இருக்கிறதே ! நான் நல்ல தாய் தானா ? என் குழந்தை எப்படி வளரும் ? நான் இப்படி அழுது கொண்டிருந்தால் என்னை பற்றி எல்லோரும் என்ன நினைப்பார்கள் ? பாரு ! இவளுக்கு எல்லாம் தான் இருக்கு . இருந்து கூட எதற்கு இப்படி அழுது கொண்டு இருக்கிறாள் ? வீட்டை சுத்தமாக வைக்க கூட தெரியாதா இவளுக்கு?”இப்படியெல்லாம் பேசுவார்களே என்று நினைத்தே சோர்ந்து போனார்.சரியாக சமைக்க கூட முடியாமல் , தான் தினம் பார்க்கும் TV தொடரை கூட பார்க்காமல் இப்படியே தன் எதிர்மறை எண்ணங்களின் கைதியாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்.பின்பு பொறுத்துக்கொள்ள முடியாத நிலைமைக்கு வந்தவுடன் இதை தன் தாயிடம் பகிர்ந்து பின்னர் ஒரு மனநல மருத்துவரை சந்தித்தார்.மருத்துவரை ஆலோசனை செய்த பிறகு தான் இந்த கோளாறை பற்றி அறிந்து கொண்டார் – அது என்ன?Post Partum Depression (அதாவது பேறு பின்னிலை மனச்சோர்வு)?குழந்தை பெற்ற பின் 6 வாரத்திற்கு பிறகு தாக்கும் மனச்சோர்வே இந்த post Partum Depression (பேறு பின்னிலை மனச்சோர்வு) . உலக அளவில் 13 % தாய்மார்களை இந்த நோய் தாக்கும் என்று சொன்னது அவருக்கு ஒரு shock செய்தி தான் . இவ்வளவு படித்திருந்தும் எனக்கு இதை பற்றி தெரியாமல் போயிற்றே ! என்று வருத்தப்பட்டார் அவரும் அவர் கணவரும் .அது சரி இது தாய்மார்களை மட்டும் தான் தாக்குமா ? என்றால் இல்லை சில சமயங்களில் தந்தைகள் கூட இந்த அறிகுறிகளோடு வந்திருக்கிறார்கள் என்று மனநல மருத்துவர் சொன்னது இன்னும் பெரிய shock செய்தி . இதை பற்றி தெரிந்திருந்தால் வீணாக time waste பண்ணாமல் சீக்கிரமே வந்து மருத்துவரை பார்த்திருப்பேனே ! என்றும் மனதில் எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தன .சரி . இந்த post Partum Depression (பேறு பின்னிலை மனச்சோர்வு ) பற்றி இன்னும் விரிவாக பார்ப்போம்.பொதுவாக குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு பின் ஒரு வருடம் வரை எப்பொழுது வேண்டுமானாலும் இந்த கோளாறு தாக்கலாம் .எல்லோருக்கும் இது தாக்குமா என்றால் இல்லை . 13 % தாய்மார்களுக்கே இது தாக்குவதாக அறிந்து கொள்கிறோம் . ஒரு ஆய்வு என்ன சொல்லுது என்று பார்த்தால் இந்தியாவில் 22 % தாய்மார்களுக்கு இந்த கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டதாம் .யாருக்கு இது அதிகமாக தாக்க வாய்ப்பு உள்ளது என்றால் சிலருக்கு ரத்த வழி சொந்தத்தில் மனச்சோர்வு பிரச்சனை இருக்கலாம் . அவர்களுக்கு இந்த நோய் தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளது .ஏழ்மை , சத்துணவு பற்றாக்குறை , மனஉளைச்சல் , வீட்டில் பிரச்சனைகள் , எதிர்பாராத சூழ்நிலையில் கர்ப்பம் தரித்தது , பல மருத்துவ பிரச்சனைகள் , குழந்தை உடல் நல பிரச்சனைகளை சமாளிக்கும் தாய்மார்களுக்கும் இந்த நோய் அதிகமாக தாக்க வாய்ப்புகள் உள்ளது .நம் நாட்டில் உள்ள சில பழக்கவழக்கங்கள் கூட இதற்கு காரணமாக அமையுதாம் ! ஆம் ! குழந்தை பிறந்தவுடன் வெளியே செல்லாமல் தனித்திருப்பது , தாயின் மீது குடும்பத்தினர் கவனம் செலுத்தாமல் குழந்தை நலனை பற்றி மட்டுமே யோசிப்பது மற்றும், மனநலம் பற்றிய புரிதல் இல்லாமல் ஒரு களங்கமாக பார்ப்பதும் சில காரணங்கள் .ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் இது குணப்படுத்தக்கூடிய கோளாறு தான் . பேச்சு சிகிச்சை , மருந்து மாத்திரைகள் , மற்றும் வாழ்கை முறை மாற்றங்களும் உதவும் . Mindfulness எனப்படும் விழிப்புணர்ச்சி பயிற்சிகளும் உதவும்.தாய்மை என்பது கட்டாயமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பே பெண்களுக்கு வெளிப்படுத்த முடியாத குற்ற உணர்ச்சியை கொடுக்க கூடும்.உங்களுக்கு இப்போது post partum depression எனப்படும் பேறு பின்னிலை கோளாறு பற்றி அறிந்து கொண்டீர்கள் அல்லவே . உங்களுக்கு தெரிந்த தாய்மரர்களுக்கு உறுதுணையாகவும் இந்த அறிகுறிகளை பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை அவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.