தினம் காலையில் வெளியே செல்வதற்கு முன் எனக்கு ஒரு பழக்கம் உண்டு . என் வீட்டின் அருகே உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்தி விட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பேன்.அப்படி தேநீர் அருந்தாமல் சென்றால் எதோ மறந்து விட்டது போலவே இருக்கும் . இன்றைய காலகட்டத்தில் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யும் வசதிகளால் தேநீரும் குளம்பியும் சூடு குறையாமல் வீட்டிலேயே இருந்து சுவைக்கும் வசதிகள் இருந்தும் ஏனோ தேநீர் கடையில் நின்று தேநீர் அருந்தும் சுவையே சுவை !தினம் செல்லும் அந்த கடைக்கு நான் சென்றவுடன் ஒரு ஆரவமற்ற அமைதி காணப்படும் ! அனைவரும் பேசுவதை நிறுத்தி ஒரு 1-2 நிமிடங்கள் அப்படியே நிற்பார்கள் . பின்பே இயல்பு நிலைக்கு வந்து அந்த கடை வழக்கம் போல செயல்படும் ! நான் அப்படி என்ன ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பெண்மணி கூட இல்லை . ஒரு பெண்மணி அவ்வளவு தான் . தனியாக ஒரு பெண் 20-30 ஆண்கள் இருக்கும் தேநீர் கடைக்கு ஒரு தோழியோ துணையோ இல்லாமல் தேநீர் அருந்த செல்வது 2021 ஆம் ஆண்டில் ஒரு அதிசயமா ? தேநீர் கடைகளில் மட்டும் இல்லீங்க . உணவகங்களிலும் கூட இந்த கூத்து தான் . எனக்கு நான் மட்டுமே உணவகத்திற்கு சென்று உணவை அமைதியாக அனுபவிப்பது என்பது மனதிற்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று .”Table for one please” என்று கேட்டவுடனேயே “இரண்டு நபரா மூன்று நபர்களா?” என்ற தேவையற்ற கேள்வி எழும் . நான் சட்டென்று “நான் சொன்னதை கேட்டிர்களா ? எனக்கு ஒரு இருக்கை போதும்” என உரக்க சொன்ன பின்பு தான் “ஓ அப்படியா!” என்று அவர்களுக்கு உரைக்கும் !அது சரி ! தேநீருக்கும் பெண்ணியத்துவத்திற்கும் ஒரு பெரிய தொடர்பே இருக்குங்க ! ஆமாம் தேநீர் களித்து தோழமை கொண்டாடிய நிகழ்ச்சிகள் தான் ஒரு காலத்தில் பெண்ணியத்திற்கு விதைகள் விதைக்க மூலமாக அமைந்தது என்றால் ஆச்சரியம் தானே?.உங்களுக்கு தெரியுமா ? அமெரிக்காவில் கூட 1910 முன்பு பெண்கள் தேநீர் வழங்கும் உணவகங்களில் ஆண்கள் இல்லாமல் தனியாக செல்ல முடியாது ! அவர்கள் வீட்டிலோ அல்லது பெண்கள் மட்டுமே இருக்க கூடிய சிறிய நிகழ்ச்சிகளில் தான் தேநீர் அருந்த முடியும் .என்னடா தேநீருக்கு பின்பு இவ்வளவு சமூக அரசியலா என்றே வியக்கத் தோன்றுகிறது அல்லவா ?அமெரிக்காவில் suffragette movement என்று சொல்லக்கூடிய பெண்கள் வாக்குரிமை போராட்டம் ஆரம்பித்ததே ஒரு தேநீர் நிகழ்ச்சிக்கு பிறகு தான் ! ஒரு 5 பெண்மணிகளே கொண்ட சிறு (tea party) தேநீர் விருந்தின் பொழுது தான் காரசாரமாக அந்த பெண்கள் பல பெண்கள் பிரச்சனைகளை பற்றி விவாதித்து சரி ! இதற்கு நாம் ஒரு முடிவு எடுத்தாகவேண்டும்! என்று Seneca Falls Convention என்ற மாநாட்டை 1848 ஆம் ஆண்டு கூட்டினர்.இந்த மாநாட்டின் முடிவில் பல கோரிக்கைகளை இந்த பெண்மணிகள் அறிவித்தனர் . அதில் சில பெண்களுக்கென்ற அடிப்படை உரிமைகளான கல்வி , வேலை வாய்ப்புகள் , சொத்து பங்கீட்டில் உரிமை மற்றும் வோட்டுரிமை போன்ற கோரிக்கைகளும் இதில் அடங்கும்.ஒரு அரை நூற்றாண்டு கழித்து 1913 இல் Belmont பெல்மொண்ட் என்ற பெண்மணி தன் வீட்டை ஒரு தேநீர் அருந்தகமாக மாற்றி அங்கே பல பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளாகிய ஓட்டுரிமை இல்லாமை போன்ற இந்த American suffragette movement இல் தொடந்து ஈடுபட்டார் .இந்த இரண்டு தேநீர் விருந்தக நிகழ்வுகளே பின்னர் 1920 ஆம் ஆண்டு US 19 th Amendment என்ற சட்டம் மாற்று ஆணையில் பெண்களுக்கு ஓட்டுரிமை வாங்கி கொடுக்க நடந்த போராட்டத்தில் கருத்துக்களை பரப்ப முக்கிய காரணிகளாக அமைந்தன.தேநீர் எனும் பானமே இந்த பெண் ஓட்டுரிமை போராட்டத்தில் முக்கியமான வினையூக்கியாக அமைந்துள்ளது ! ஆச்சிரியம் தானே ! இப்பொழுது நினைத்தாலும் எப்படி தான் அந்த காலத்தில் அமெரிக்க பெண்கள் கூட இவ்வளவு பின் தங்கி இருந்தார்களோ ! என்று நினைக்க தோன்றும் . இன்றும் தேநீர் கடையில் தனியாக ஒரு பெண் தேநீர் அருந்த செல்வதையோ அல்லது உணவகத்தில் “Table for one please ” என ஒரு இருக்கை கேட்பதையோ புருவம் நிமிர்த்தி பார்க்கும் காலகட்டத்திலே தான் இருக்கிறோம் எனும் பொழுது இன்னும் பல மைல்கள் கடக்க வேண்டி உள்ளது . ஒரு வேளை பின் வரும் காலங்களில் “இப்படியும் பெண்கள் 2021 இல் பாகுபடுத்த பட்டார்களா” என்று உலகம் ஆச்சிர்யப்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கு ! அந்த நாளும் விரைவில் வந்தால் நல்லது தான் .Dr ராதிகா முருகேசன்

Leave a Reply

Your email address will not be published.